முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவத் படத்துக்கு எதிராக குஜராத்தில் கடும் வன்முறை - தியேட்டர்கள் மீது தாக்குதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

அகமதாபாத் : இன்று நாடு முழுவதும் படம் வெளியாகவுள்ள நிலையில், பத்மாவத் படத்திற்கு எதிராக குஜராத் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள தியேட்டர் வளாகங்களில் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படம், ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக திரித்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றியும், காட்சிகளை மாற்றி அமைத்தும் வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது.

சுப்ரீம் கோர்ட் மறுப்பு

இந்தப் படம் இன்று (25–ந் தேதி) வெளியாகிறது.  ஆனாலும், பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதற்கிடையே  பத்மாவத் படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட் நீக்கி கடந்த 18–ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. அதையும் சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. பத்மாவத் படத்துக்கு எதிராக ராஷ்ட்ரீய ராஜ்புத் கார்ணி சேனா, அகில பாரதிய சத்திரிய மகாசபை தாக்கல் செய்த வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனவே இந்தப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது.

தீ வைப்பு சம்பவம்...

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

துப்பாக்கி சூடு

இதனால், போராட்ட கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கிருந்து அவர்கள்  கலைந்து சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

பக்தியில் மூழ்கிய தீபிகா

தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் பத்மாவத். இத்திரைப்படத்திற்கு மிக கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. ஆகவே தணிக்கைக் குழு சில விஷயங்களை மட்டும் படத்தில் இருந்து மாற்ற வலியுறுத்தியது. அதன்படி இதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தின் தலைப்பை பத்மாவத்என மாற்றம் செய்தார். இருந்தும் ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலில் தீபிகா படுகோனே சாமி தரிசனம் செய்தார். தடைகளை மீறி படம் வெளியாக உள்ள நிலையில் அவரது சாமி தரிசனம் மிக முக்கியமானதாக அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இக்கோயிலுக்கு அவர் வருகை தந்த போது மிக கடுமையான போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து