முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு முதிய வாக்காளருக்கு கலெக்டர் நடராஜன் பொன்னாடை அணிவித்து கெளரவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட நாளாகும்.  பொதுமக்களிடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இத்தினத்தினை தேசிய வாக்காளர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். இப்பேரணியில் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியைச் சார்ந்த 500 மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியானது அரண்மனை வளாகத்தில் இருந்து துவங்கி வண்டிக்காரத் தெரு, வழிவிடு முருகன் கோவில் வழியாக ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.  அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்  தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். அதன்பின்பு ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்குத் தரவை கிராமத்தில் 101 வயது பூர்த்தியடைந்த முதிய வாக்காளரான ச.ஹவ்வாம்மாள்  என்பவருக்கு கலெக்டர் நேரில் சென்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
 அதன்பின்பு ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசினர் பொறியியல் கல்லூரியில்; நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட கலெக்டர் தலைமையேற்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு புதிய வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ‘அனைவரும் அணுகத்தகுந்த தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- நமது தேசம், மக்களை ஆளுகின்ற தலைவர்களை மக்களே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வகையில் மக்களாட்சி முறையை பின்பற்றும் தேசமாகும். இத்தகைய மக்களாட்சி முறையில் வலிமையான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பொறுப்பை உணர்ந்து தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர்களை தவறாமல் பதிவு செய்திட வேண்டும்.  அதேவேளையில்  வயது முதிர்ந்த பெரியோர்கள் தாமாக முன்வந்து ஆர்வமுடன் வாக்களிக்க ஏதுவான சூழ்நிலையினை ஏற்படுத்திட வேண்டும். 
 அந்த வகையில் இன்றைய தினம் தெற்குத்தரவை பகுதியில் 101 வயது பூர்த்தியடைந்த அம்மையாருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.  அதேபோல மாவட்டத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட  எண்ணிக்கையில் 100 வயது கடந்த வாக்காளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  அவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதிகளில் கௌரவித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தேர்தலின்போது எவ்வித அச்சமின்றியும், மத, இன மற்றும் மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். இவ்வாறு பேசினார்.  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நகராட்சி ஆணையாளர் நடராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.மணிராஜ், தேர்தல் வட்டாட்சியர் நித்யானந்தம், ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சித்திரைவேல் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து