முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி வெற்றி - கேப்டன் விராட் கோலி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருக்கக்கூடிய வெற்றி. எங்களின் பயணத்துக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துவிட்டது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

2-1 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தாலும், இந்திய அணியை வொயிட்வாஷ் செய்யும் நோக்கில் தென் ஆப்பிரிக்க அணி 3-வது போட்டியில் பேட் செய்தது. ஆனால், மதிய உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு ஒட்டுமொத்த முடிவையும், அனைவரின் கணிப்பையும் புரட்டிப்போட்டது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஜோகன்ஸ்பர்க்கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் கிடைத்தது மிகவும் “இனிப்பான வெற்றி” . இந்த வெற்றியை நாங்கள் நீண்டகாலத்துக்கு நினைவில் வைத்து இருப்போம். இந்த வெற்றி கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியோடு ஒப்பிடலாம்.

ஏனென்றால், லாட்ஸ் மைதானம் என்பதும் எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது. ஜோகன்ஸ்பர்க் நகரில் எந்தமாதிரியான ஆடுகளம் இருந்ததோ அதேபோன்ற ஆடுகளம்தான் லாட்ஸ் மைதானத்திலும் இருந்தது.

ஆனால், இங்கு இருப்பதைப் போன்று பந்து அதிவேகத்தில் வராது. லாட்ஸ் மைதானத்தில் நடந்த அந்த போட்டியிலும், வீரர்களின் பேட்டிங், பந்துவீச்சு திறமை ஆகியவற்றால் வெற்றி பெற்றோம்.

அதோபோன்ற ஒரு திறமையான ஆட்டத்தை இந்த ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் வீரர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத வெற்றியை நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் மீட்டு எடுத்து இருக்கிறோம்.
எங்கள் அணியைப் பற்றி யார் என்ன கூறினாலும் அது குறித்து கவலையில்லை. நாங்கள் கூட்டாக, விளையாடியதால், இங்கு வெற்றி பெற முடிந்தது.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கு அருகே வந்து தவறவிட்டோம் என்பதை நினைத்து வருத்தப்பட்டோம். ஆனால், இந்த போட்டியில் வெற்றியை அடைந்துவிட்டோம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அவர்களின் பணி சிறப்பானது.

இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்பினோம், அதேபோல் வெற்றியும் கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் எந்த சூழலில் இருக்கும் ஆடுகளத்திலும், எங்களால் தாக்குப்பிடித்து, திறமையை வெளிப்படுத்தி விளையாட முடியும் என்ற மனவலிமையை கொடுத்து இருக்கிறது.

நாங்கள் தோல்விகளை முதலில் அடைந்தாலும், வெற்றியுடன் முடித்து இருக்கிறோம். இந்த வெற்றியை எங்களால் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாது. நான் மட்டுமல்ல, அணி வீரர்கள் அனைவரும் இதை நம்புகிறார்கள். ஓய்வு அறையில், ஒட்டுமொத்த அணியின் மனிநிலையை மாற்றி, மகிழ்ச்சியான சூழலுக்கு இந்த வெற்றி வித்திட்டுவிட்டது.

இதுபோன்ற ஆடுகளத்தில் முதலில் பேட்டிங்கை ஏன் தேர்வு செய்தேன் என பலர் குழம்பினார்கள். ஆனால், இதுபோன்ற ஆடுகளத்தில் கடைசி நாளில் பேட்டிங் செய்யும் அணி மிகுந்த சிரமப்பட வேண்டியது இருக்கும் என்பதை ஆடுகளத்தை வைத்து முடிவு செய்துதான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தேன்.

இந்த டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் 19 நிமிடங்கள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது குறித்து நான் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெறப்போகிறோம் என எங்களுக்கு தெரியும். ஆதலால், எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருந்தோம். ஆதலால், கிடைக்கின்ற சூழலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மட்டுமே எண்ணினோம். இவ்வாறு கோலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து