முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்திய அணி முன்னிலை...
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. 6 ஒருநாள் போட்டித் தொடரில் டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

3-வது ஒருநாள்....
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு ஒருநாள் தொடரை வெல்வது அவசியமானது. அதற்காக இன்றைய ஆட்டத்திலும் வென்றால் தான் அதற்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கலாம். தென்ஆப்பிரிக்காவின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டால் சாதகமான நிலையில் இருக்கலாம்.

சுழற்பந்து வீச்சாளர்கள்...
ஒருநாள் தொடரில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ரகானே, தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியின் பலமே சுழற்பந்து வீச்சுத்தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். இன்றைய ஆட்டத்திலும் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம் இருக்காது...
கடந்த 2 போட்டியில் இந்தியா கைப்பற்றிய 20 விக்கெட்டுகளில் இருவரும் இணைந்து எடுத்தது 13 விக்கெட்டாகும். சாஹல் 7 விக்கெட்டும், குல்தீப் 6 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். இதேபோல வேகப்பந்து வீரர்களான புவனேஷ்வர்குமாரும், பும்ராவும் நல்ல நிலையில் தான் உள்ளனர். இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. வீரர்களின் காயத்தால் தென்ஆப்பிரிக்கா திணறிவருகிறது. ஏற்கனவே காயம் காரணமாக முன்னணி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஆடவில்லை. அவர் 4-வது போட்டியில் தான் இணைவார்.

80-வது போட்டி...
இதேபோல கேப்டன் டுபெலிசிஸ் 2-வது போட்டியில் இருந்து விலகி எஞ்சிய தொடர் முழுவதும் ஆடமாட்டார். தற்போது விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கும் காயத்தால் விலகி உள்ளார். அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் தென் ஆப்பிரிக்கா நெருக்கடியில் உள்ளது. ஹசிம் அம்லா, எல்கர், டுமினி ஆகியோரது பேட்டிங்கை பொறுத்தே அந்த அணியின் நிலை இருக்கிறது. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியை பெறும் ஆர்வத்துடன் அந்த அணி இருக்கிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 80-வது போட்டியாகும். இதுவரை நடந்த 79 ஒருநாள் போட்டியில் இந்தியா 31-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.

இன்றைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி டென், சோனி சிக்சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து