காயம் காரணமாக வங்காள தேச தொடரில் இருந்து மேத்யூஸ் விலகல்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      விளையாட்டு
Mathews 2018 2 6

டாக்கா : காயம் காரணமாக வங்காள தேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து மேத்யூஸ் விலகியுள்ளார்.

வங்காள தேசத்தில் இலங்கை, வங்காள தேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வங்காள தேசம் - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

முத்தரப்பு ஒருநாள் போட்டியின்போது மேத்யூஸ் காயமடைந்தார். இதனால் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 8-ந்தேதி டாக்காவில் தொடங்குகிறது. மேத்யூஸின் காயம் குணமடையாததால் 2-வது டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.


ரிஸ்க் எடுக்க...

வங்காள தேசத்திற்கு எதிரான தொடர் முடிவடைந்ததுடன் இலங்கை, இந்தியா, வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் மார்ச் 8-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேத்யூஸ் காயம் குறித்து இலங்கை தலைமை தேர்வாளர் கூறுகையில் ‘‘வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டு ஆட்டங்களுக்காக மேத்யூஸ் விவகாரத்தில் ரிஸ்க் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய திட்டம் மேத்யூஸ் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் முத்தரப்பு தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

கேப்டனாக திசாரா...

மேத்யூஸ் விளையாடாததால் இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பேரேரா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள தேசம் - இலங்கை இடையிலான முதல் ஆட்டம் 15-ந்தேதியும், 2-வது ஆட்டம் 18-ந்தேதியும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து