தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள்: வெற்றி இலக்காக 304 ரன்கள் நிர்ணயித்தது இந்திய அணி கேப்டன் கோலி 160 ரன்களுடன் 'நாட் அவுட்'

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      விளையாட்டு
virat kohli 2017 10 29

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெற்றி இலக்காக 304 ரன்கள் நிர்ணயித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி 160 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

கோலி அதிரடி...
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி கேப் டவுனில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மர்கராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே டக்-அவுட்டானார். இதையடுத்து ஜோடி சேர்ந்த தவன், விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர்.

கோலி சதம்...
12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவன், 24-ஆவது ஓவரில் வெளியேறினார். தவன், கோலி ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த ரஹானே 11, பாண்டியா 14, தோனி 10, ஜாதவ் 1 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் நங்கூரமாய் நின்ற கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 34-ஆவது சதமாகும். மொத்தம் 159 பந்துகளைச் சந்தித்து 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களின் உதவியுடன் 160 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.


304 ரன்கள்...
இந்நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த புவனேஸ்வர் குமார், பொறுப்புடன் விளையாடி 16 ரன்கள் சேர்த்து கடைசி வரை கோலியுடன் களத்தில் நின்றார். ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியபோது இவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. மேலும், விக்கெட் சரிவை நிறுத்தியதுடன் இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி 300 ரன்களை எளிதில் கடக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் டுமினி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா, மோரிஸ், ஃபெலுக்வாயோ, தாஹிர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து