மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      மதுரை
Assembly Evaluation Committee 9 2 18

மதுரை -மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு, சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்  பி.எம்.நரசிம்மன் அவர்கள் மற்றும் 9 உறுப்பினர்கள் அடங்கிய குழு மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  ஆய்வு மேற்கொண்டது.                      
 இக்குழு அரசு இராசாசி மருத்துவமனை, சொக்கிகுளம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஒத்தக்கடை அங்கன்வாடி மையம், ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்துணவு மையம், வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட, நீரோத்தான் வளம் மீட்புப் பூங்கா, மேலப்பொன்னகரம் அம்மா உணவகம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
 அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 மதுரை மாவட்டத்தில் இன்று நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வானது மிகவும் சிறப்பாக அமைந்தது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மதுரை மாவட்டம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.  இதற்கு முக்கிய காரணம் மதுரை மாவட்ட நிர்வாகம் தான்.  இக்குழுவானது மிக முக்கியமானதாகவும், நிதி சம்மந்தப்பட்ட குழுவாகவும், சட்டமன்றத்திற்கும், பொது மக்களுக்கும், அரசிற்கும் ஒரு பாலமாக இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிப்பணிகள் ஆற்றுவதற்கு, நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கிறது.
 ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மானியத்தின் மீதும் ஒதுக்கப்படுகின்ற நிதி ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான முறையில் செலவு செய்யப்படுகிறதா அல்லது குறைவாக இருக்கின்றதா என்பதை கண்டறிந்து துறையும் சிறப்பாக இருப்பதற்கு இக்குழுவானது உறுதுணையாக இருக்கிறது.  ஒவ்வொரு திட்டமும் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கு இக்குழு துணை நிற்கிறது. 
 தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள்.  இக்கோரிக்கைகளில் உள்ள நல்ல திட்டங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு, மாவட்டத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்கு இக்குழு ஆக்கப்பூர்வமாக செயல்படும்.  மேலும் அரசிற்கு ஒரு பாலமாக இருந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற அத்திட்டங்களை எல்லாம் உங்களுடைய மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கு இக்குழு துணைநிற்கும் என தெரிவித்தார்.
 முன்னதாக வருவாய்த்துறையின் சார்பில் 65 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ரூ.65000 மதிப்பிலும், ரூ.19,33,000 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா 27 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா எம்பிராய்டரி தையல் இயந்திரம் ரூ.19,920 மதிப்பிலும், சமூகநலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.14,56,250 மதிப்பிலான தாலிக்கு தங்கமும் என மொத்தம் 119 பயனாளிகளுக்கு ரூ.34,74,170 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள்  எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்),  ஆர்.கனகராஜ் (சூலூர்),  இரா.குமரகுரு (உளுந்தூர்பேட்டை),  எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி),  தங்கம் தென்னரசு ( ்சுழி),  ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), டாக்டர்.வி.பி.பி.பரமசிவம் (வேடசந்தூர்),  கே.பி.பி.பாஸ்கர்  (நாமக்கல்),  வி.வி.இராஜன்செல்லப்பா (மதுரை வடக்கு), சட்டமன்ற உறுப்பினர்கள்  பி.மூர்த்தி (மதுரை கிழக்கு),  எஸ்.எஸ்.சரவணன் (மதுரை தெற்கு),  பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்),  பி.நீதிபதி (உசிலம்பட்டி),  கே.மாணிக்கம் (சோழவந்தான்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து