சாதனை படைக்க கோலி டீமுக்கு வாய்ப்பு: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா ? 4-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      விளையாட்டு
Indian Oneday 2018 01 09

Source: provided

ஜோகன்ஸ்பர்க் :  இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியில இந்திய அணி வெற்றிப் பெற்றால் விராட் கோலி தலைமையிலான படை தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை முதலில் கைப்பற்றிய இந்திய அணி என்ற பெருமையை பெறும்.

இந்தியா முன்னிலை...

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 6 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டி முடிந்துள்ளது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் கேப்டவுனில் நடந்த 3-வது போட்டியில் 124 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

4-வது ஒருநாள்...

இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவான நிலையில் இருக்கிறது. கேப்டன் விராட்கோலி ரன் எந்திரமாக உள்ளார். அவர் 2 சதம் உள்பட 318 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து தொடக்க வீரர் ஷிகர் தவான் 162 ரன் எடுத்து உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா இன்னும் சொபிக்கவில்லை. இதனால் அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். ரகானே, பான்ட்யா, டோனி, கேதர் ஜாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

வென்றதில்லை...

பந்துவீச்சில் சுழற்பந்து கூட்டணியான குல்தீப் யாதவ்-சாஹல் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா திணறி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டியில் சாஹல் 11 விக்கெட்டும், குல்தீப் 10 விக்கெட்டு என இருவரும் மட்டுமே 21 விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர். இன்றைய போட்டியிலும் குல்தீப்- சாஹல் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை. முதல் முறையாக தொடரை வெல்ல இந்தியா நல்ல வாய்ப்பு உள்ளது. அதனை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்.

வீரர்கள் காயம்...

தென்ஆப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் திணறி வருகிறது. கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது டிவில்சியர்ஸ் திரும்பி இருப்பது அந்த அணிக்கு ஆறுதல் தரக்கூடிய வி‌ஷயமாகும். ஆனாலும் முன்னணி பேட்ஸ் மேன்களான ஹசிம் ஆம்லா, டுமிஸ், மார்கிராம், டேவிட் மில்லர் ஆகியோர் ரன் குவிக்க திணறி வருகிறார்கள். குல்தீப்-சாஹல் சுழற்பந்து வீச்சை சமாளித்து எப்படி ரன் எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ், ரபடா, இம்ரான்தாகீர், நிகிடி ஆகியோர் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தொடரை இழக்கும்...

ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வி சந்தித்துள்ள தென்ஆப்பிரிக்கா இன்றைய போட்டியிலும் தோற்றால் தொடரை இழக்கும். தொடரை சமன் செய்ய எஞ்சியுள்ள 3 போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இதனால் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இன்று மோதுவது 81-வது போட்டியாகும். இதுவரை நடந்த 80 ஒருநாள் போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.

இந்திய வீரர்கள்: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, அக்‌ஷர் பட்டேல், ‌ஷர்துல் தாக்கூர்.

தென்ஆப்பிரிக்கா: மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாகீர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலக்வாயோ, ரபடா, ‌ஷம்சி, ஜோன்டோ, பெஹர்டைன், ஹென்ரிச் கிளாசென்.

முதல் கேப்டன் கோலி...?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றது கிடையாது. தென்ஆப்பிரிக்க மண்ணில் 4 முறை ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று உள்ளது. இதில் 4 முறையும் தொடரை இழந்தே இருக்கிறது. 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 5-2 என்ற கணக்கிலும், 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான அணி 5 போட்டி கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கிலும் இழந்தது. டோனி தலைமையில் 2010-ம் ஆண்டு 3-2 (5 போட்டி), 2013-ம் ஆண்டு 2-0 (3 போட்டி) என்ற கணக்கிலும் தொடரை இழந்தது.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் பெருமையை கோலி பெறுவார். மேலும் ஒருநாள் போட்டி தர வரிசையில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தை பிடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து