வருமானவரி அதிகாரி என ஏமாற்றி ஜெ. தீபா வீட்டில் சோதனைக்கு வந்த வாலிபர் தப்பியோட்டம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      தமிழகம்
deepa(N)

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வீட்டிற்கு நேற்று காலை வருமான வரித் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி வந்த நபர் போலீஸ் விசாரணையின் போது தப்பி ஓடினார். அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெ.தீபாவின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது. நேற்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்கு ஒருவர் வந்துள்ளார். தனது பெயர் நிதேஷ் குமார் எனக் கூறிய அவர் தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் வீட்டை சோதனையிட தன்னிடம் வாரண்ட் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஜெ.தீபாவின் வழக்கறிஞர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் அந்த நபர் கொண்டு வந்த வாரண்ட் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருந்த போது சந்தேகம் ஏற்படவே அவர் மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மாம்பலம் காவல் நிலையம் உதவி ஆணையர் செல்வம் தலைமையில் வந்த போலீஸாரை கண்டதும் அந்த நபர் வீட்டின் மதில் சுவர் வழியாக ஏறிக் குதித்து தப்பியோடினார். இதையடுத்து வீட்டின் முன் நின்றிருந்த போலீசார் அவரை துரத்தினர். ஆனால் அவர் போலீசின் வலையில் சிக்காமல் ஓடி தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த நபரைப் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே தீபா வீட்டில் புகுந்த நபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படம் மற்றும் அடையாள அட்டை சிக்கியுள்ளதால் அதன் மூலம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன்,
நேற்று காலை 7 மணியளவில் ஒரு நபர் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தினார். மேலும் தன்னிடம் சோதனைக்கான வாரண்ட் இருப்பதாகவும் கூறினார். அதிகாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் 4-5 அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொள்வதே வழக்கம். ஒரே ஒரு அதிகாரி என்றால் அவர் 10 மணிக்கு மேலேதான் வருவார் என்பதால் எனக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக எனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் விரைந்து வந்து விசாரித்தார். சந்தேகம் வலுக்கவே போலீஸில் தகவல் கொடுத்தோம். நாங்கள் சந்தேகித்தது போல் அவர் போலி அதிகாரி என்பது அவர் தப்பியோடியதிலிருந்து உறுதியாகிவிட்டது என்றார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து