முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஓ.பி.எஸ். முன்னிலையில் தமிழக சட்டப்பேரவையில் நாளை ஜெயலலிதா உருவப்படம் திறப்பு - சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      தமிழகம்
TN assembly 2017 06 02

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். முன்னிலையில் நாளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார்.

நல்லடக்கம்

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கடற்கரையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட கடற்கரையில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என்றும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

உருவப்படம்...


மறைந்த முதல்வர் ஜெயலலிதாபிறந்தநாள் விழா வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா மறைந்து ஒராண்டு நிறைவடையும் நிலையில் அவரது உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா வரும் நாளை நடைபெறுகிறது.

சட்டசபையில் நாளை காலை நடைபெறும் இந்த விழாவில் சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

அழைப்பிதழ்...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம், நாளை காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ப.தனபால் பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்து வைக்கிறார். இது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விழாவிற்கான அழைப்பிதழ் தனித்தனியே உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து