ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 33ஆயிரத்து 869பேர் எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
group 4 exam 11 2 18

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-4 தேர்வினை 33 ஆயிரத்து 869 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை 1, நிலஅளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3) உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்வதற்காக தொகுதி-4  தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்விற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்த 39ஆயிரத்து 906 நபர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இத்தேர்வினை அமைதியான முறையில் நடத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 134 இடங்களில் உள்ள 157 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வின் போது முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுத்திடும் வகையில் வருவாய் வட்டத்திற்கு ஒரு குழு வீதம் 8 பறக்கும் படை குழுக்களும், 37  நிறுத்தும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    நேற்று காலை நடைபெற்ற இந்த தேர்வின்போது ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு கலெக்டர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வினை 33 ஆயிரத்து 869 பேர் மட்டுமே எழுதினர். மீதம் உள்ள 6 ஆயிரத்து 37 பேர் தேர்வினை எழுதவில்லை. இது 84 சதவீதம் ஆகும். தேர்வினையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து