காங்கிரஸ் நிர்வாகிகளை கண்டுகொள்ளாத ப.சிதம்பரம் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தி

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
cithambaram 11 2 18

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகிகளை கண்டுகொள்ளாத ப.சிதம்பரம் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் காதர். முன்னாள் காங்கிரஸ் எம்.பியான இவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் ஆவார். அப்துல்காதரின் மகன் ரசூல் மைதீன் திருமணம் திண்டுக்கல் வேலு மகாலில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ப.சிதம்பரம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனிராஜா, மேற்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல் கவுண்டர், மாநகர தலைவர் சொக்கலிங்கம், கல்பனா உட்பட 100க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் _ நத்தம் சாலையில் காலை 9 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் 11.30 மணியளவில் ப.சிதம்பரம் கார் நத்தம் சாலையில் வந்தது. அப்போது அவருக்காக காத்திருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியால் அவரது கார் முன்பு வந்து கைகளை அசைத்தபடி அழைத்தனர். ஆனால் ப.சிதம்பரம் அதனை கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்காமலும், ஒரு புன்னகை கூட காட்டாமல் விறுட்டென சென்று விட்டார். காரின் கண்ணாடியை கூட திறக்காமல் அவர் சென்றதைப் பார்த்து அங்கிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் திருமண மண்டபத்திற்கு வந்த அவர் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் தங்களை தலைவர்களாக நினைத்துக் கொண்டே வலம் வருகின்றனர். அதனால் தான் பல கோஷ்டிகளாக பிரிந்து தொண்டர்களை கண்டுகொள்ளாத கட்சியாக காங்கிரஸ் விளங்கி வருகிறது. தான் மத்திய அமைச்சராக இருந்த போதே சொந்த ஊரில் கார் கண்ணாடியை கீழே இறக்காமல் ஏ.சி.காரில் உலா வந்த ப.சிதம்பரம் தற்போதும் அதே பந்தாவை கடைபிடித்து வருவதாக தொண்டர்கள் குமுறிச் சென்றனர்.  இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சி காணாத கட்சியாக மாறி விடும். ஒவ்வொரு முறையும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களைப் பிடித்து விட்டால் தாங்களும் கட்சி நடத்தி வருவதாக மக்களை நம்பவைத்து விடலாம் என்ற நினைப்பில் இருந்து காங்கிரஸ் மீண்டுவர வேண்டும் எனவும் தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து