தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு துணை முதல்வர் ஓ.பி.எஸ். துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      தமிழகம்
OPS Launch Jallikattu 2018 2 11

சின்னமனூர் : அய்யம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக சீறி பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர். முன்னதாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஏழைகாத்தம்மன் ஸ்ரீவல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரமாண்டமான ஜல்லிக்கட்டு திருவிழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார், மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் முன்னிலை வகித்தார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாடிவாசலை திறந்து ஜல்லிக்கட்டினை துவக்கி வைத்தார்.


வாடிவாசலில் அய்யம்பட்டி கோயில் காளை முதலில் திறந்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 517 காளைகள் வந்திருந்தன. அதனை கால்நடை மருத்துவ குழுவினர்கள் ஒவ்வொரு காளைகளையும் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்கினர். 465 மாடு பிடி வீரர்களையும் அரசு மருத்துவ குழுவினர்கள் பரிசோதித்தனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு பிடி வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சீறி பாய்ந்த மாடுகளை வீரர்கள் மடக்க முயற்சித்தனர்.  ஆனால் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் சில மாடுகள் வீறுகொண்டு ஓடின. சில மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசினை பெற்றுக் கொண்ட வீரர்கள் உற்சாகமாக சென்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறு சிறு காயமடைந்த 49 பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு போடி டி.எஸ்.பி பிரபாகரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ள 108 ஆம்புலன்சுகளும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போட்டியில் வெற்றி பெற்ற காளையர்களுக்கும், சிறந்த  காளைகளுக்கும் விழாக்குழுவினர்கள் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சர்வகட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து