கேப்டன் விராட் கோலி - அசாருதீன், கெயில் சாதனை முறியடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      விளையாட்டு
virat record 2018 2 11

ஜோகன்ஸ்பர்க் : சர்வதேச ஒருநாள்போட்டிகளில் அதிக ரன் சேர்த்த இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.

உலக அளவிலான கிரிக்கெட் என எடுத்துக்கொண்டால், மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலின் ரன் குவிப்பை தகர்த்து அடுத்த கட்டத்துக்கு கோலி முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியின் போது விராட் கோலி 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போதுதான் இந்த ரன்குவிப்பு சாதனையை கோலி செய்தார்.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன.

ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் 75 ரன்கள் சேர்த்தன் மூலம், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீனின் 9,378 ரன்கள் சாதனையை கோலி கடந்து, 9,423 ரன்களை எட்டினார். உலக அளவில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலின் 9,378 ரன்களையும் கோலி முறியடித்துள்ளார்.

இதுவரை 206 ஒருநாள்போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 9,423 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் ரன் சராசரி 57.45 ஆகும். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த 5-வது வீரர் எனும் பெருமையை விராட் பெற்றார். தென் ஆப்பிரிக்க வீரர் டீவில்லியர்ஸ் 9541 ரன்களை கடக்க கோலிக்கு இன்னும் 118 ரன்களே தேவைப்படுகிறது. இந்த தொடரில் அதை கடப்பார் என நம்பலாம்.

இந்திய அளவில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்), அதைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி(11,363), ராகுல் டிராவிட்(10,889), தோனி(9,954) ஆகியோர் உள்ளனர். விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.

உலகஅளவில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இலங்கை முன்னாள் வீரர் குமரா சங்கக்கரா(14,243), ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (13,704) உள்ளனர்.

உலக அளவில் எடுத்துக்கொண்டால், ஒருநாள் போட்டியில் அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் 16-வது இடத்தில் விராட் கோலி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 34 சதங்களும், 46 அரை சதங்களும் விராட் கோலி அடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை டீ வில்லியர்ஸ் மட்டுமே 350 ரன்களைக் கடந்துள்ளார். 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தொடரில் அந்த சாதனையை டீவில்லியர்ஸ் செய்திருந்தார். இப்போது அவருக்கு அடுத்தபடியாக கோலி 2-வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து