இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      உலகம்
India-United Arab Emiratest 12 02 2018

Source: provided

அபுதாபி : அபுதாபி இளவரசர் முகமது பின் சையத் அல் நாஹ்யானுடன் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜோர்டானில் இருந்து அபுதாபிக்கு வந்தார். அவரை இளவரசர் முகமது பின் சையது மற்றும் அரச குடும்பத்தினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.

அபுதாபி இளவரசர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "நமது அரசு விருந்தினரும் மதிப்புமிக்க நண்பருமான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்கிறோம். அவரது வருகையானது இருதரப்புக்கும் இடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளையும், நட்பு ரீதியிலான உறவுகளையும் பிரதிபலிக்கின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மோடி இரண்டாவது முறையாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இளவரசர் முகமது பின் சையதுடன் அபுதாபி அரண்மனையில் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல் முறையாக கடந்த 2015இல் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அபுதாபி அரண்மனைக்கு இளவரசரால் அழைக்கப்பட்டுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நவீனமான நாடு என்ற முறையில் அமீரகத்தின் வளர்ச்சிக்கு இந்தியப் பணியாளர்கள் ஆற்றிய பங்களிப்பை இளவரசர் பாராட்டினார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் "எனது நண்பர் முகமது பின் சையதுவை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைந்துள்ளேன். இந்திய-அமீரக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இந்த ஒத்துழைப்பு நமது நாடுகளுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்தும் நாங்கள் விரிவான முறையில் பேச்சு நடத்தினோம்' என்று தெரிவித்தார்.

பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு முன்பு இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் விவாதித்ததாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.  இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் இருதரப்புக்கும் இடையே எரிசக்தி, ரயில்வே, மனிதவளம், நிதிச்சேவைகள் ஆகிய துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அபுதாபி அரசுக்குச் சொந்தமான லோயர் ஜாகும் கன்செஷன் என்ற ஆழ்கடல் எண்ணெய் வயல் நிறுவனத்தில் இந்திய நிறுவனங்களுக்கு 10 சதவீத பங்கை அளிக்க வகை செய்யும் ஒப்பந்தமும் அவற்றில் ஒன்றாகும்.

இந்த உடன்பாட்டில் ஓவில், பிபிஆர்எல், ஐஓசிஎல் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய இந்தியக் கூட்டமைப்புக்கும், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்த் துறையில் இந்தியா மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும்.

இதனிடையே, அமீரகத்தின் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, இருநாட்டு மக்களிடையிலான தொடர்புகள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தார். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களையும் மோடி சந்தித்துப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து