முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இந்து பெண் கிருஷ்ணகுமாரி எம்.பி.ஆகிறார்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

சிந்து: பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் இருந்து இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

மார்ச் மாதம் நடைபெறும் செனட் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி) சார்பில் கிருஷ்ண குமாரி போட்டியிடுகிறார். அவரை ஆதரிக்க அனைத்து எம்.பி.க்களுக்கும் கட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சிந்து மாநிலத்தின் செய்தித்தொடர்பாளர் நசீர் ஷா கூறுகையில், “ மார்ச் 3-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண குமாரி போட்டியிடுகிறார். அவருக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால், அவர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தான் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது குறித்து கிருஷ்ண குமாரி கூறுகையில், “ நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் எம்.பி. ஆகிறேன் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. எனது கட்சியின் முன்னாள் தலைவர் பெனசீர் பூட்டோவுக்குதான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். என்னைத் தேர்வு செய்த கட்சித் தலைமைக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்த நல்ல பணிகளைச் செய்வேன்.

நான் சிறு வயதில் சிந்து மாநிலத்தின் நாகர்பர்கர் கிராமத்தில், அடிமை போன்று சூழலில் வளர்ந்தேன். மிகப்பெரிய நிலச்சுவான்தார்களிடம் அடிமைப்பட்டு அவர்களுக்காக என் பெற்றோரும், நானும் உழைத்தோம். ஏழ்மையாக இருந்த சூழலிலும் என் பெற்றோர் என்னை நல்ல கல்வி கற்க உதவி, பட்டமேற்படிப்பு படிக்கவும் துணை நின்றனர்” எனத் தெரிவித்தார்.

சிந்து மாநிலத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும், கிருஷ்ண குமாரி, குழந்தைகளுக்கான கல்வி குறித்து விழிப்புணர்விலும், மனித உரிமைகள் குறித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து