காதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை

லக்னோ, காதலர் தினத்தன்று மாணவ, மாணவிகள் பல்கலை வளாகத்துக்குள் வரக்கூடாது, ஜோடியாகச் சுற்றித் திரியக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், காதலர் தினம் இந்தியாவின் கலாச்சாரம் அல்ல, இந்து மதத்துக்கு விரோதம் எனக் கூறி பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதலர்கள் தினத்தன்று ஜோடியாக இருக்கும் காதலர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதுண்டு. இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னோ பல்கலைக்கழகத்துக்கு காதலர்தினத் தன்று மாணவ,மாணவிகள் வரக்கூடாது, கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித்திரியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதிவரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், மஹா சிவராத்திரி பண்டிகை வருவதால், அன்றைய தினம் பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும். அன்றைய தினம் மாணவர்கள் யாரும் எந்தவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14-ம் தேதி எந்தவிதமான வகுப்புகளும், செய்முறைத் தேர்வுகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்காது. ஆதலால், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் பல்லைகழகத்துக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம். இந்த உத்தரவை மீறி பல்கலைகழகத்துக்குள் சுற்றித்திரியும் மாணவ, மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.