முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா, பீகார் மாநிலத்தில் கிராமத்துப் பெண் ஒருவர், பிச்சை எடுத்து தனது வீட்டுக்கு கழிப்பறை கட்டிய முயற்சிக்கு சூபால் மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

சூபால் மாவட்டத்தில் பைப்ரா வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோஷி பிரதேசத்தில் உள்ள கிராமம் பாத்ரா உத்தார். இக்கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அமினா கதூன் அக்கம்பக்கத்து கிராமங்களுக்குச் சென்று தனது வீட்டுக்கான கழிப்பறை கட்டுவதற்காக பிச்சை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தனிப்பட்ட இப்பெண்ணின் முயற்சியை மாவட்ட கலெக்டர் பாராட்டினார். தனது வீட்டுக்கு கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்ட ஒரு கொத்தனார் மற்றும் ஒரு சித்தாள் ஆகியோர் தங்கள் ஊதியத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதையும் விழாவில் அமினா பகிர்ந்துகொண்டார். கணவரை இழந்த 40 வயது அமினா பதின்பருவ சிறுவனின் தாய். இவர் ஜீவனத்துக்காக கூலிவேலை செய்துவருகிறார். வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிக்கொள்வதற்காக அதற்கான நிதிஉதவி கேட்டு வட்டார அதிகாரிகளை நாடியபோது அவர்கள் இவரைப் புறக்கணித்துள்ளனர்.

இதனால் சற்றே வேதனையுற்றாலும் அமினா மனம் தளரவில்லை. யாரிடமும் சென்று கடன் கேட்கும் நிலையில் அவர்களது வாழ்க்கை இல்லை. என்ன செய்வது என யோசித்தபோதுதான் பிச்சை எடுத்தாவது கழிப்பறை கட்டி முடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதை சாதித்தும் காட்டினார். பீகாரில் ஸ்வச் பாரத் அபியான் திட்டங்கள் பெரிய அளவில் பிரபல்யப்படுத்தப்பட்டிருந்த போதிலும், உதவி நாடிவரும் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரிகள் எவ்வளவு அக்கறையின்மையோடு நடந்துகொள்கிறார்கள் என்பதையே இந்நிகழ்வு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. பீகாரில் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்னும் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இன்னும் ஒரு மாவட்டம் கூட 'திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டம்' என்று இதுவரை கூறவில்லை. இம்முயற்சிகளில், இந்திய மாநிலங்களில் பீகார் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து