வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 கனஅடியாக சரிவு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      தேனி
vaigai dam13  2 18

ஆண்டிப்பட்டி,- முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 கனஅடியாக சரிந்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் பிரதான நீர்ஆதாரமாக விளங்கும் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு வந்து கொண்டிருந்தது.  இதற்கிடையே வைகை அணையில் இருந்து கூடுதலான தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. தற்போது 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் குறைந்த நிலையில் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 அடியாக சரிந்துவிட்டது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் தண்ணீரை கோடைகால குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வைகை அணை நீர்தேக்கப்பகுதியில் 15 முதல் 20 அடிவரையில் வண்டல் மண் படிந்துள்ளதால், தற்போது இருப்பில் உள்ள தண்ணீரின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியுமா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தா£ல் வைகை அணையை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள மதுரை மாநகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வைகை அணைக்கு இக்கட்டான நிலையில் கைகொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தற்போது 114.25 அடியாக சரிந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்னும் 6 அடி அளவிலான தண்ணீரை மட்டுமே தேனிக்கு திறக்க முடியும் என்பது குறிப்பித்தக்கது.
 நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 39.27 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 890 மில்லியன்கனஅடியாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து