முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      விளையாட்டு
Spo - New zealand beat 2018 01 13

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து.

பீல்டிங் தேர்வு...
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகிறது. நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி மன்னன் கொலின் முன்றோ 11 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ட்டின் கப்தில் 40 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்களும், கேன் வில்லியம்சன் 46 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

197 ரன்கள் இலக்கு...
அறிமுக வீரர்கள் சேப்மேன் 13 பந்தில் 20 ரன்னும், செய்ஃபெர்ட் 6 பந்தில் 14 ரன்னும் எடுக்க நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த தாவித் மலன் அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 47 ரன்னும், தாவித் மலன் 40 பந்தில் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து வெற்றி...
இதனால் நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. நியூசிலாந்து வருகிற 16-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 18-ந்தேதி இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு ஆட்டத்தில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து