தென் ஆப்பிரிக்க அதிபர் ஜுமா பதவி விலக மறுப்பு

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      உலகம்
14  PICT  2 2018 01 14

ஜோக்கன்பர்க்: ஊழல் விவகாரங்களில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா (75) பதவி விலக வேண்டும் என்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

கடந்த 2009-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அதிபராக ஜேக்கப் ஜுமா பதவியேற்றார். அதற்கு முன்பாக அவர் துணை அதிப ராக இருந்தபோது 1999-ல் ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2014-ம் ஆண்டில் அரசு பணத்தில் சொகுசு வீடு கட்டியது, அரசு ஒப்பந்தங்களை குப்தா குழுமத்துக்கு முறைகேடாக ஒதுக்கியது உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஜுமா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ஜுமாவின் ஊழல் விவகாரங்களால் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த டிசம்பரில் கட்சியின் புதிய தலைவ ராக பதவியேற்ற சிரில் ரமாபோஸா மற்றும் மூத்த தலைவர்கள் தேர்தல் நிலவரம் குறித்து கடந்த 2 மாதங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலக வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் உயர்நிலைக் கூட்டம் பிரிட்டோரியா நகரில் நடைபெற்றது. சுமார் 13 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், அதிபர் ஜேக்கப் ஜுமா 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனையும் அவர் ஏற்க மறுத்துள்ளார்.

எனவே நாடாளுமன்றத்தில் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக தென்ஆப்பிரிக்க அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து