இந்தியாவின் வரி விதிப்பு முறையால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      இந்தியா
trump 2017 10 12

டெல்லி: ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் மீதான இந்தியாவின், வரி விதிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளைமாளிகையில், அமெரிக்க எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தியபோது டிரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளதோடு, இந்தியா ஏற்றுமதி செய்யும் மோட்டார் சைக்கிள்கள் மீது வரி விதிக்க ஆலோசிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளியான தகவல்கள் இவைதான்: நமது நாட்டு மோட்டார் சைக்கிள் ஹார்லி டேவிட்சன், அந்த நாடுகளுக்குள் செல்லும்போது அதிகப்படியான வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா ஒரு நாடு என்பதை நான் சொல்ல தேவையில்லை.

ஒரு 'கிரேட் ஜென்டில்மேன்' என்னுடன் தொலைபேசியில் பேசினார். இப்போது நாங்கள் மோட்டார் சைக்கிள் மீதான வரிகளை குறைத்துள்ளோம், 75 சதவீதம் வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளோம், சில பைக்குகளுக்கு வரியே இல்லை என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு டிரம்ப் கூறியது இந்தியாவைத்தான் என தெரிகிறது.

இந்தியா உயர்தர மோட்டார் சைக்கிள் மீதான வரியை 50 சதவீதம் வரை குறைத்திருந்தது. இதுகுறித்து டிரம்ப் மேலும் கூறுகையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இறக்குமதி வரியை செலுத்தும் நிலையில், இந்திய நிறுவன பைக்குகள் ஆயிரக்கணக்கில் வரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பதிலுக்கு நாமும் வரி விதிக்க வேண்டியது தேவைப்படுகிறது. இவ்வாறு டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், ஆண்டுக்கு சராசரியாக 3,700 என்ற அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா இந்தியாவிடமிருந்து அதிகப்படியாக பைக்குகளை இறக்குமதி செய்யவில்லை. இருப்பினும் டிரம்ப் இவ்வாறு பதிலுக்கு பதில் வரி போடுவோம் என பேசியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து