காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யில் மாற்றம்: ராகுல்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      இந்தியா
rahul gandhi 2017 8 17

கல்புர்கி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி) புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், கலபுர்கியில் தனியார் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில் அவர் பேசியதாவது,
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு 5 அடுக்கு முறையில் சரக்கு மற்றும் சேவை வரியை வசூலித்து வருகிறது. இதனால், தொழில் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அதை தீர்க்க முடியாமல் பா.ஜ.க அரசு திணறி வருகிறது.

மத்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அரசியலில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்க வேண்டும். முதல்வர், அமைச்சர்கள் போன்ற பதவிகளில் பெண்கள் அமர வேண்டும். -ராகுல்

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினால் 5 அடுக்கு முறையிலான சரக்கு மற்றும் சேவை வரியை, ஒரே அடுக்காக குறைத்து புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்.

மத்தியில் அமைச்சராக உள்ள அனைவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் வழிகாட்டுதலின்படியே நடந்து கொள்கின்றனர். ஆட்சி அதிகாரத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் தலையீடு அதிகம் உள்ளது. அந்த அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.
அண்டை நாடுகளுடன் நட்புறவாக நடந்து கொள்ள வேண்டும். சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வர்த்தகத்தில் சிறந்து விளங்க முடியும். நமது நீண்ட நாள் தோழமை நாடான ரஷ்யாவிடம் இருந்து இந்தியா விலகியுள்ளது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அரசியலில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்க வேண்டும். முதல்வர், அமைச்சர்கள் போன்ற பதவிகளில் பெண்கள் அமர வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து