இதர பிற்படுத்தப்பட்டோர் நல நிதி 41 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      இந்தியா
Tawarshan Gelat 2018 02 14

புதுடெல்லி, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நல நிதி 41 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சமூக நீதித் துறை அமைச்சகத்துக்கு ரூ.7,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.6,908 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறை 12.10 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நல நிதி கடந்த பட்ஜெட்டில் ரூ.1,237.30 கோடியாக இருந்தது.

இப்போது ரூ.1,747 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 41.03 சதவீத உயர்வாகும். இது தவிர சமூக நீதித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 11.57 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான பெற்றோரின் வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.44,500 என்பதில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு இலவச பயிற்சிகளைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான துணிகர முதலீட்டுத் திட்டம் ஏற்கெனவே உள்ளது. இதேபோல இதர பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்குவதற்கான துணிகர முதலீட்டுத் திட்டம் ரூ.200 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து