இந்தியாவில் தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் சதித்திட்டம் - நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      இந்தியா
india-pak border 2017 5 23

வாஷிங்டன் : பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து இந்தியாவிற்குள் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு தலைவர் டான்கோட்ஸ் எச்சரித்துள்ளார்.

தொடர் தாக்குதல்...

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் அதே நேரத்தில் தீவிரவாதிகளும், இந்தியாவுக்குள் ஊடுருவி சதி திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். மும்பை தாக்குதல், பாராளுமன்ற தாக்குதல் போன்ற மிக பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதை முறியடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


பயங்கரவாதியாக...

சர்வதேச நாடுகளின் கடும் நெருக்கடி காரணமாக மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதை பயங்கரவாதி என சமீபத்தில் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனாலும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய வீரர்கள், பொதுமக்கள் உயிரிழந்தனர். அதே போல் ஜம்மு அருகே உள்ள ராணுவ முகாமுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்குள்ள அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் தாக்குதலை அரங்கேற்றினார்கள். இதில் 5 அதிகாரிகள், ஒரு சிறுமி ஆகியோர் பலியானார்கள். தீவிரவாதிகள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

புதிய ரக அணுகுண்டு....

இந்த நிலையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்காவல் நடந்த நிகழ்ச்சியில் தேசிய புலனாய்வு இயக்குனர் டான்கோட்ஸ் பேசியதாவது,

பாகிஸ்தான் தற்போது அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. புதிய ரக அணுகுண்டுகளை உருவாக்கி உள்ளது. மேலும் குறுகிய தூர தாக்குதல் நடத்தும் அதிநவீன ஆயுதங்களையும் உருவாக்கி இருக்கிறது. கடல் வழியாக தாக்கும் ஏவுகணைகள், ஆகாய வழி ஏவுகணைகள், மேலும் நீண்ட தூர ஏவுகணைகள் ஆகியவற்றை புதிதாக உருவாக்கி உள்ளது. இது இந்தியா உள்ளிட்ட  ஆசிய பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவுடன் உள்ள நட்புறவை நீடிக்க விரும்பவில்லை. அதிலிருந்து விலகி சென்று வருகிறது.

விரிவான தாக்குதல்...

மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு அண்டை நாடுகளுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருகிறது. இத்துடன் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இன்னும் மோதல் போக்கை அதிகரிக்க செய்யலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். தேசிய புலனாய்வு இயக்குனரின் பேச்சையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து