சென்னை கொளத்தூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 85 சவரன் தங்கநகைகள், வைரகம்மல்கள், ரொக்கம் கொள்ளை

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      சென்னை

சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் கொள்ளை சம்பவங்கள், வழிபறி சம்பவங்கள் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கைரேகை

செயின் பறிப்பு சம்பவங்களால் பெண்கள் தங்க செயினை அணிந்துக்கொண்டு வெளியில் செல்ல அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் போலீசாருக்கு சவால் விடும் வகையில் பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சென்னை கொளத்தூர் சரோஜினி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் முரளிபாஸ்கர் (வயது 30). இவர் சென்னை அடுத்த அம்பத்தூர் கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 12ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி புவனேஸ்வரி, மகன்கள் விஜயஹரி, சாய்விஷ்னு ஆகியோருடன் திருப்பதிக்கு சென்றார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தின இரவு 10 மணியளவில் வீடு திரும்பினர். வீடு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 85 சவரன் தங்க நகைகளையும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 ஜதை வைரகம்மல்களையும், ரொக்கபணம் ரூ.49 ஆயிரம் மற்றும் கால் கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது தெரிவந்தது.

இதுகுறித்து முரளிபாஸ்கர் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். கொள்ளை நடந்த இடத்திற்கு அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், வில்லவிவாக்ம் உதவி கமிஷனர் முத்துமணிகண்டன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். கைரேகை போலீசார் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து