செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 19-ம் தேதி தீர்ப்பு

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
hassini murder case 2018 2 14

சென்னை : ஹாசினி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு வருகிற 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

பாலியல் கொடுமை...

மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக முதலில் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தாய் படுகொலை...

இதையடுத்து தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் குன்றத்தூரில் குடியேறினார். அப்போது செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி தனது தாய் சரளாவையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மும்பை விமான நிலையம் அருகே ஓட்டலில் இருந்தபோது தஷ்வந்த் தப்பி ஓடினார். அவரை மீண்டும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இறுதி கட்ட விசாரணை...

இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கல்பட்டு கோர்ட்டு வளாகத்தில் மகளிர் அமைப்பினர் அவரை தாக்கிய சம்பவமும் நடந்தது. ஹாசினி கொலை வழக்கில் இறுதி கட்ட விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் தினமும் நடந்துவந்தது. மொத்தம் 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஹாசினியின் பெற்றோர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு...

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு வருகிற 19-ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி வேல் முருகன் அறிவித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக சீதாலட்சுமியும், தஷ்வந்த் தரப்பு வக்கீலாக ராஜ்குமாரும் ஆஜராகி வாதாடினார்கள். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து