முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோனஸ்பர்க் : தென்ஆப்ரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சு தேர்வு...

தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தென்ஆப்ரிக்கா அணியின் டேன் வான் நெய்கெர்க்கும், லிசெல் லீயும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். லிசெல் லீ 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுன் லுயஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சோலே அதிரடி...

அதன்பின் நெய்கெர்க்குடன், மிக்னான் டு ப்ரீஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். நெய்கெர்க் 38 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் நடின் டி கிளெர்க் களமிறங்கினார். பிரீஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சோலே ட்ரையான் அதிரடியாக விளையாடினார். அவர் 7 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

164 ரன்கள் குவிப்பு...

தென்ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இந்திய அணி பந்துவீச்சில் அனுஜா பாட்டில் 2 விக்கெட்களும், பூஜா வஸ்திரகர், ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மிதாலி ராஜ் நிதானமாக விளையாடினார்.

மிதாலி அரைசதம்

மந்தனா 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அதன்பின் ஜெமிமா ரொட்ரிகஸ் களமிறங்கினார். அவர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து மிதாலி ராஜுடன், வேதா கிருஷ்ணமூர்த்தி ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய மிதாலி ராஜ் அரைசதம் கடந்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இந்தியா முன்னிலை...

இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 168 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் மோஸ்லின் டெனியல்ஸ், டேன் வான் நெய்கெர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி 16-ம் தேதி நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து