முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா ஒப்புதல்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனை இன்றி, வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அந்த நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வாஷிங்டன் நகரில் கூறியதாவது:

கடுமையான நிபந்தனைகள் ஏதுமின்றியே வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது - அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதிலும், அதுவரை அந்த நாட்டுக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களை அளிக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது.

எனினும், கடுமையான நிபந்தனைகள் ஏதுமின்றியே வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் அவர். இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தில் சோவியத் யூனியன் வசமிருந்த பகுதி வட கொரியா எனவும், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி தென் கொரியா எனவும் பிரிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கிம் இல்-சங் தலைமையில் வட கொரியா ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ரஷியப் படையினர் 1948-ஆம் ஆண்டு அந்த நாட்டைவிட்டு வெளியேறினர். அதிலிருந்து, கிம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். கடந்த 1950-ஆம் ஆண்டு முதல், 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.

மேலும், கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவை வெள்ளிக்கிழமை வந்தார். கொரியப் போருக்குப் பிறகு, வட கொரியாவை ஆளும் கிம் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் தென் கொரியாவுக்கு வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் யோ ஜோங்குடன், வட கொரியாவின் கெளரவத் தலைவர் கிம் யோங்-நாமும் தென் கொரியா வந்து தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நல்லிணக்கப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தனது தங்கை மூலம் அழைப்பு விடுத்தார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் வட கொரியாவுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தற்போதைய தென் கொரிய அதிபர் மூன் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். எனினும், வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இருந்தாலும், தனது அணு ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று வட கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். எனினும், வட கொரியா விரும்பினால் மட்டுமே அந்த நாட்டுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து