முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் திருவண்ணாமலையில் ஆயுஷ் மருத்துவமனை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சித்த மருத்துவக்கல்லூரியும், திருண்ணாமலையில் ஆயுஷ் மருத்துமனையும் விரைவில் துவங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நலம் வாழ் - சித்த மருத்துவக் கண்காட்சியினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை வழங்கும் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் 1491 மருத்துவ நிலையங்களில் 1058 சித்தா மருத்துவ நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஐந்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதிக்கு அரசு மருத்துவக்  கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்ற தனிப்பட்ட பெருமையை தமிழ்நாடு  கொண்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 160 சித்த மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் 94  பட்ட மேற்படிப்புகளில் இடங்களும் உள்ளது.

தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) இந்திய மருத்துவ முறை மருந்துகளான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகளை தயார் செய்யும் நோக்கத்திற்காக 1983-ம் ஆண்டு துவக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் தடுப்பு  மற்றும் குணப்படுத்த, மலைவேம்பு, நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச் சாறு பயன்படுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க 11 வகையான சித்த மருத்துவ மூலிகைகள் "அம்மா மகப்பேறு சிகிச்சை பெட்டகம்" என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2-ம் தேதி இந்திய முறை மற்றும் ஓமியோபதி துறையை சேர்ந்த 105  மருத்துவர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தேனி  மற்றும் திருவண்ணாமலையில் 7 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள்  கொண்ட சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துடன் இணைந்த ஆயுஷ் மருத்துவமனையும், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி   விரைவில் துவங்கப்படும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார்,  முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை  முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்  பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி  துறை இயக்குநர் செந்தில்ராஜ், இணை இயக்குநர் பார்த்திபன், அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகவள்ளி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து