முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகம் இனி புதிய அணை கட்ட முடியாது: 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை  கர்நாடகம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகம் இனி புதிய அணை கட்ட முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று வெளியிட்டது.

நடுவர் மன்ற தீர்ப்பு...

கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளிக்கும் போது, தமிழகத்தில் இருக்கும் நிலத்தடி நீரை கருத்தில் கொள்ளவில்லை என்றும், கர்நாடகாவை விட தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், எனவே, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீர் வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்துக்கு குறைவு...

மேலும், கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவை, தொழில்நிறுவனங்களுக்கான தேவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் காவிரி நீரை பகிர்ந்து அளித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கூறி 14.75 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குக் குறைவாக ஒதுக்கியிருக்கும் சுப்ரீம் கோர்ட், அதனை கர்நாடகாவுக்கு அளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

இதுவரை சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வந்த கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீரை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அதனை எப்படி பங்கிட வேண்டும் என்றும் ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது. அதன்படி, கடும் குடிநீர் பஞ்சத்துக்கு உள்ளாகியிருக்கும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் கவலை

ஏற்கனவே தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரில் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் 177.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பருவ மழை பற்றாக்குறை காலங்களில் இந்த 177.25 டி.எம்.சி நீரும் கிடைக்குமா என்ற கேள்வியும், பற்றாக்குறை காலங்களில் காவிரி நீரை எப்படி பங்கிடுவது, எந்த அளவுக்கு நீர் கிடைக்கும் என்ற கேள்வியும் தமிழக விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

மேலாண்மை வாரியம் அமைக்க...

காவிரி ஆற்றை தனிப்பட்ட ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. அதாவது  6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

புதிய அணை கட்ட முடியாது

1892, 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

மேல்முறையீடு கிடையாது...

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் ஆலோசனை...

தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காவிரி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • தீர்ப்பின் சிறப்பம்சங்கள்
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:-
    1.காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும்.
    2. 2007-ல் நடுவர்மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.
    3. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
    4. தமிழகத்திற்கான ஒதுக்கீடு குறைப்பால் கர்நாடகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும்.
    5. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
    6. காவிரி நீரை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது.
    7. கர்நாடகாவுக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி அளித்த நிலையில் அது 284.75 டிஎம்சியாக உயர்வு.
    8. தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சியில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு.
    9. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும்.
    10. கேரளா (30 டிஎம்சி) புதுச்சேரி (7 டிஎம்சி) என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.
    11. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு.
    12. தீர்ப்பின் மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடகா நீரைத் திறக்க வேண்டும்.
    13.பெங்களூரின் குடிநீர் தேவை, தமிழக நிலத்தடி நீர் இருப்பு குறித்து நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
    14. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டு விட்டன.
    15. நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் சரி செய்யப்பட்டதால் அது இறுதித் தீர்ப்பாக இருக்கும்.
    16. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
    17.நடுவர் மன்ற உத்தரவு இறுதி செய்யப்பட்டு விட்டதால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
    18. சென்னை மற்றும் மைசூரு மாகாணங்கள் இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லும்.
    19. சென்னை, மைசூரு மாகாண ஒப்பந்தங்களின்படி, காவிரியில் தமிழக அனுமதியின்றி அணை கட்ட முடியாது.
    20. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து