முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பூச்சொரிதல் ஊர்வலம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பூச்சொரிதல் ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரங்களை அள்ளித் தரும் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வருடத்திற்கான திருவிழா நேற்று முன்தினம் (15ம் தேதி) பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது. அன்று மாலை கோவில் வளாகத்தில் பல வண்ண மலர்களாலும், பொடிகளாலும் கோலமிட்டு வழிபட்டனர். நேற்று பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீகோட்டை மாரியம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய பிரமுகர்கள் வழிபாடு செய்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். அம்மனின் பூத்தேர் கோவில் முன்பிருந்து துவங்கி மேற்கு ரதவீதி, பென்சனர் தெரு, கோபாலசமுத்திர கரை, மேற்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.
பச்சைப்பட்டு உடுத்தி ஸ்ரீகோட்டை மாரியம்மன் தேரின் நடுவில் நடுநாயமாக வீற்றிருக்க, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீஅய்யப்பன் ஆகியோர் புடைசூழ தேர் வலம் வந்தது. வழிநெடுகிலும் அம்மனை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் மலர்களை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பூச்சொரிதல் மண்டகப்படி அமைக்கப்பட்டும் மலர்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த பூக்களைக் கொண்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் அந்த பூக்களே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக ஆங்காங்கே தன்னார்வ தொண்டர்களும், தனியார் அமைப்பினரும் நீர்மோர் பந்தல், பிரசாதங்கள் வழங்கினர். மாலை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மலர்களைக் கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்செய்து வணங்கினர். திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் ராட்டினங்கள், பொழுது போக்கு அம்சங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை போன்றவை அமைக்கப்பட்டிருந்தது. 
மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் தொடங்கியதையடுத்து திண்டுக்கல் மாநகரமே இன்னும் ஒரு மாதத்திற்கு விழாக் கோலம் பூண்டிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து