முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

குல்தீப் நீக்கம்...

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்காவும் (2-1), ஒரு நாள் தொடரை இந்தியாவும் (5-1) கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், ஜூனியர் டாலா அறிமுகம் ஆனார்கள்.

இந்தியா பேட்டிங்...

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முற்றிலும் பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில், பேட்டர்சன் வீசிய முதல் ஓவரில் ‘ஷாட்பிட்ச்’ பந்துகளை 2 சிக்சர் மற்றும் பவுண்டரிக்கு ஓட விட்டு ரோகித் சர்மாஅமர்க்களப்படுத்தினார். இதே போல் அடுத்த ஓவரிலும் எழும்பி வந்த பந்தை அடிக்க முயற்சித்த போது ரோகித் சர்மா (21 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச் ஆனார்.

மீண்டும் ரெய்னா...

2-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னா அடியெடுத்து வைத்தார். ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய ரெய்னா, 7 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரெய்னா 15 ரன்களில் (7 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து கோலி இறங்கினார். இதற்கிடையே தவான் 10 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது பந்து கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச்சாக சிக்கியது. இதை கவனிக்காத நடுவர் வைடு வழங்கினார். அவர்களும் அப்பீல் செய்யாததால் தப்பி பிழைத்த தவான், அதன் பிறகு ரன்மழை பொழிந்தார்.

கோலி 26 ரன்கள்...

கோலி 10 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெஹர்டைன் கோட்டை விட்டார். இந்திய அணி 8.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. அதே சமயம் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்காத கோலி 26 ரன்களில் (20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷம்சியின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை.

தவான் 72 ரன்....

இதன் பிறகு மனிஷ் பாண்டே ஆட வந்தார். மறுமுனையில் அரைசதத்தை கடந்து மிரட்டிய தவான் தனது பங்குக்கு 72 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். இறுதிகட்டத்தில் இந்தியாவின் ரன்வேகம் சற்று தளர்ந்து போனது. 220 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோர் கடைசியில் 200 ரன்களை கடப்பதே பெரிய விஷயமாகி விட்டது. பாண்டே, டோனி ஜோடி தடுமாறியதே இதற்கு காரணம். டோனி 16 ரன்களில் (11 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே (29 ரன், 27 பந்து, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா (13 ரன், 7 பந்து, 2 பவுண்டரி) களத்தில் நின்றனர்.

புவனேஷ் அசத்தல்...

பின்னர் பவுண்டரியுடன் தங்களது ரன் கணக்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் ஸ்மட்ஸ் (14 ரன்), கேப்டன் டுமினி (3 ரன்) கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து குடைச்சல் கொடுத்தார்.

அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது, 18-வது ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் அவர் ஹென்ரிக்ஸ் (70 ரன், 50 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கிளாசென் (16 ரன்), கிறிஸ்மோரிஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளகரம் செய்ததுடன், அந்த ஓவரில் பேட்டர்சன் ரன்-அவுட்டும் ஆனார். அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி நம்பிக்கை முழுமையாக தகர்ந்தது.

இந்தியா வெற்றி

20 ஓவர்கள் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து