முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் அருகே தனியார் ஆதரவற்றோர் இல்லத்தினை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் மலையடிவாரப் பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த கருணை இல்லமானது சுமார் 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கருணை இல்லத்திற்கு என பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளது. இக்கருணை இல்லத்தில் தற்போது ஆதரவற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 250 பேர் தங்கியுள்ளனர்.

30 அடி ஆழ பள்ளம்

இந்த கருணை இல்லத்தின் கிளை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கருணை இல்லங்களில் இறப்பவர்களை பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்ல கட்டிடத்தின் பின்புறத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி பிணவறையில் உடலை வைத்து சிமெண்ட் போட்டு மூடிவிடுகிறார்கள். அந்த தொட்டி போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ள பிணங்கள் நாளடைவில் அழுகி சதை மற்றும் உறுப்புகள் சல்லடை வழியாக 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த தொட்டிக்குள் நிற்கும் எலும்பினை விற்பனை செய்வதாகவும், இந்த பிணங்களால் வெளியேரும் நீரினால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் இந்த இல்லத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதி செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் இருந்த விஜயகுமார் 75 என்பவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இவரது சடலத்தினை பாலேஸ்வரம் கொண்டு செல்ல கருணை இல்லத்திற்கு சொந்தமான வாகனத்தில் விஜயகுமாரின் சடலத்தினை வைத்து அதனுடன் இரும்புலியூர் கருணை இல்லத்தில் இருந்த செல்வராஜ் 72, அன்னம்மாள் 74 ஆகிய இருவரையும் உடன் அழைத்து கொண்டு பாலேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமுக்கூடல் அருகே வாகனம் வந்த போது காடுகளை கண்டும், பிணத்தினை கண்டும் அன்னம்மாள் பயத்தின் கதறிதாகக் கூறப்படுகிறது. கருணை இல்ல வாகனத்தில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்க உடனே சாலையோரம் நின்றிருந்த திருமுக்கூடல் கிராமவாசிகள் வாகனத்தினை விரட்டி பிடித்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாகனத்தினை சிறை பிடித்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காவல் நிலையத்தில் விசாரித்ததில் அன்னம்மாள் பயத்தில் கூச்சலிட்டதாகவும் அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.

உடனே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அன்னமாளின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் வாகனத்தில் வந்த செல்வராஜினை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். கருணை இல்ல நிர்வாகம் கொண்டு செல்ல முற்பட்ட கருணை இல்ல வாகனத்தினை சிறை பிடித்த கருணை இல்ல நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாலவாக்கம் போலீசார் உத்திரமேரூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் பேரில் போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து