முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவில் கொடியேற்றம் _பக்தர்கள் பரவசம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் நகர மக்களின் காவல் தெய்வமாகவும், கேட்டவருக்கு கேட்ட வரம் வழங்கும் தெய்வமாகவும் ஸ்ரீகோட்டை மாரியம்மன் விளங்கி வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வருடத்திற்கான திருவிழா கடந்த 15ம் தேதி  பூத்தமலர்  பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது. மறுநாள் 16ம் தேதி  பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட  பூத்தேரில் ஸ்ரீகோட்டை மாரியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு விஸ்வகர்ம மகாஜன சபையினரால் கொண்டு வரப்பட்ட திருமாங்கல்யம் மற்றும் மஞ்சள் புடவை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு  பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பன்குல சமூகத்தினரால் கொண்டு வரப்பட்ட பாலக்கொம்பு கோவில் முன்பு ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. சிங்க வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி சிறப்பு  பூஜைகளுக்கு பின் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள், அம்மன் படத்திற்கு மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி, ஸ்ரீகோட்டை மாரியம்மன் தாயே போற்றி என்று பக்தி பெருக்கால் சத்தமிட்டு வணங்கினர். அதனைத் தொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் தங்கள் கைகளில் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினர். கோவிலைச் சுற்றி ஏராளமான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். மேலும் கோவில் கொடிமரம் முன்பு விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். தினந்தோறும் அம்மன் மின்தேரில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அங்குவிலாஸ் மண்டகப்படி வரும் மார்ச் 1ம் தேதியும்,  பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி 2ம் தேதியும் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து