முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 17 பேர் பலி: இரங்கல் கூட்டத்தில் மாணவி ஆவேசம்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும் பேசிய அந்த மாணவி, அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தையும், துப்பாக்கி கலாச்சாரத்தையும் வெளுத்து வாங்கினார். இது குறித்து அந்த மாணவி பேசியதாவது,

புளோரிடாவில் துப்பாக்கி வாங்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. துப்பாக்கி உரிமமும் தேவையில்லை. அதை வாங்கிய பிறகு பதிவு செய்ய வேண்டியதும் இல்லை. எங்கும் எடுத்துச் செல்லலாம். யாரும் கேட்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் எத்தனை துப்பாக்கிகளையும் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். இதுதான் நிலைமை.

ஆஸ்திரேலியாவில் கடந்த 1999-ம் ஆண்டு போர்ட் ஆர்தரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. உடனே துப்பாக்கி கட்டுபாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அங்கு துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை. ஜப்பானில் துப்பாக்கிச்சூடு நடந்ததே இல்லை. கனடாவில் 3 முறையும் இங்கிலாந்தில் ஒரு முறையும் நடந்தது. இரு நாடுகளிலும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இங்கு இன்னமும் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது. அரசு இப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து தோட்டாவுக்கு பலியாக வேண்டியதுதான்.

அதிபர் டிரம்ப் நேரில் வந்து என்னிடம், ``இது மிகவும் துயரமான சம்பவம், இனிமேல் இதுபோல் நடக்காது..'' என சொல்ல விரும்பினால், அவரிடம் நான் ஒன்றை கேட்பேன். ``தேசிய துப்பாக்கி கழகத்திடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்..?'' எனக் கேட்பேன். அவர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அது எனக்கே தெரியும். 3 கோடி டாலர்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் துப்பாக்கிச்சூடுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், ஒருவருக்கு 5,800 டாலர் வருகிறது. ஒருவரின் உயிரின் மதிப்பு அவ்வளவுதானா மிஸ்டர் டிரம்ப்? இப்போதாவது நடவடிக்கை எடுங்கள்.

தேசிய துப்பாக்கி கழகத்திடம் நன்கொடை வாங்கும் ஒவ்வொரு அரசியல்வாதியையும் கேட்கிறேன். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் வாங்கிய பணம் உறுத்தவில்லையா? அப்படி உறுத்தினால் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த ஒருமுறையாவது நல்லது செய்ய முன்வாருங்கள். கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த மனநலம் பாதித்தவர்கள் துப்பாக்கி வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை அதிபர் டிரம்ப் மாற்றினார். இதை அவர் செய்யாமல் இருந்திருந்தால், இத்தனை உயிர் போயிருந்திருக்காது. சொகுசு நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும் நம் செனட்டர்களும் எம்.பிக்களும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது என்கிறார்கள். இது அபத்தம்.

இவ்வாறு அந்த மாணவி பேசினார். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து