முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு - அமைச்சர் தங்கமணி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மேலும், தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2.57 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய மற்றும் பணிசுமை குறித்து ஒப்பந்தம் நிர்வாகத்திக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே நேற்று மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் சாய்க் குமார், எரிசத்தி துறை முதன்மை செயலர் விக்ரம் கபூர், தொழிலாளர் ஆணையர் பாலச்சந்தரன், இயக்குனர் நிதி மனோகரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

காலமுறை ஊதியம்

இந்த ஒப்பந்தம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 1-1.2-.2015 முதற்கொண்டு அமல்படுத்தப்படவேண்டிய ஊதிய மாற்றம் குறித்து அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பணியாளர்களுக்கு 2.57 காரணியில் ஊதிய உயர்வும் ( ஊதியம்+ தரஊதியம்) மாதமொன்றுக்கு களப்பணி உதவியாளருக்கு குறைந்த பட்ச பணப்பலன் ரூ.3,175 ஆகவும் (வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி உட்பட) அதிகபட்ச பணப்பலன் ரூ.7,775 -ஆகவும் இருக்கும். அலுவலர்களுக்கு குறைந்த பட்ச பணப்பலன் ரூ.5,800 ம் அதிகபட்ச பணப்பலனாக ரூ.27,375 ம் இருக்கும். வாரியம் 60 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும். வாரியத்தில், அனைத்து ஆரம்பநிலை பதவிகளுக்கும் பயிற்சி காலம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டு பயிற்சி காலத்திலேயே காலமுறை ஊதியம் அளிக்கப்படும். இந்த பயிற்சி காலமுறை ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வரும்.

புதிதாக 2,654 பதவிகள்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று கூடுதலாக பல்வேறு நிலைகளில் 2,654 பதவிகள் உருவாக்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கூடுதல் செலவினமாக மாதமொன்றுக்கு ரூ.109.82 கோடியும், ஆண்டொன்றுக்கு ரூ.1,317.87 கோடிவீதம் ஏற்படும். இதன்மூலம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் சுமார் 79,100 ஊழியர்களும், 11,169 அலுவலர்களும் பயனடைவார்கள். இந்த செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும்.

கூடுதல் சலுகைகள்...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1.12.2015 ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தத்தில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகள் மற்றும் கூடுதல் செலவுகள் வருமாறு:-

அனைத்து கணக்கீட்டாளர் நிலை 2 பதவிகளும் கணக்கீட்டாளர் பதவிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், அனைத்து மஸ்தூர் பதவிகளும் களப்பணி உதவியாளர் பதவிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.80 லட்சம் கூடுதல் செலவாகும். ஓப்பந்த ஊழியர்களின் தினக்கூலி ரூ.250 - லிருந்து ரூ.380 ஆக உயர்த்தப்படுகிறது. புதிய பணிநியமனங்களின் போது அனைத்து ஆரம்ப நிலை பதவிகளுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி காலமாக 3 மாதங்கள் காலமுறை ஊதியத்துடன் பயிற்சி அளிக்கப்படும். மின்பகிர்மான வட்டங்களிலுள்ள 43 மதிப்பீட்டு அலுவலர் பதவிகள் முதுநிலை மதிப்பீட்டு அலுவலர் பதவிகளாக (கணக்கு அலுவலர் ஊதியவிகிதத்தில்) தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.8 லட்சம் கூடுதல் செலவாகும்.

ரூ.86.42 கோடி கூடுதல்...

110 கி.வா. மின் நிலையங்களில் விடுபட்ட இடங்களில் உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர் நிலை 1 பதவிகள் உருவாக்கப்படும். பகுதி நேர துப்புரவு பணியாளர்களின் ஊதியம் ரூ.1300-3000+ ரூ.300 - தர ஊதியம் உள்ள ஊதியவிகிதம் ரூ.4,100 -12,500 என்ற ஊதிய விகிதமாக மாற்றியமைக்கப்படுகிறது. 2000 மின்பாதை ஆய்வாளர் பதவிகள் புதியதாக உருவாக்கப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.86.42 கோடி கூடுதல் செலவாகும். கிராமப் பகுதிகளில் 383 முகவர் முதல் நிலை பதவிகள் சிறப்பு நிலை முகவர் பதவிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.19 லட்சம் கூடுதல் செலவாகும்.

ஒப்பந்தம் கையெழுத்து...

அதிக வருவாய் உள்ள 156 துணைகோட்ட அலுவலகங்களில் புதியதாக மதிப்பீட்டு அலுவலர் பதவிகள் உருவாக்கப்படுகிறது. கோயம்புத்தூர் பெருநகரம் மற்றும் மதுரை பெருநகர மின் பகிர்மான வட்டங்களில் 96 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள் புதியதாக உருவாக்கப்படுகிறது. பிரதி மாதத்தின் 4-ம் சனிக்கிழமை வாரியத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் விதமாக பணிநேரம் மாலையில் 15 நிமிடங்கள் நீடிக்கப்படும்.

பின் மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து