முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வேயில் 89,409 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுதலாம்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ரயில்வேயில் உள்ள 89 ஆயிரத்து 409 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வை தற்போது தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வரும் மக்களவைத் தேர்தலை 2019க்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனடிப்படையில் முதலில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 502 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து தண்டவாள பராமரிப்பாளர், டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மென், எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான 62 ஆயிரத்து 907 "குரூப் டி" அறிவிப்பு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ.களில் படித்திருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி. வழங்கிய தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான எழுத்துத் தேர்வை அவரவர்களின் தாய்மொழியிலேயே எதிர்கொள்ளும் வகையில், இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்த வினாத்தாள், தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வுக்கான கேள்வித்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிகள்:
ஹிந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு சலுகை:
பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது பிரிவினர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் என அனைவருக்கும் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் திரும்பி வழங்கப்படும்:
இந்த அறிவிப்புக்கு முன்பு தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வுக்கான கட்டணம் ரூ.100 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ.400 திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் "குரூப் டி" பிரிவுக்கு அடுத்த மாதம் மார்ச்.12க்குள்ளும், லோகோ பைலட் பணியிடங்களுக்கு மார்ச் 5க்குள்ளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து