முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் - இந்திய திரையுலகினர் - ரசிகர்கள் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

துபாய் : பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். நடிகை ஸ்ரீதேவியின் தீடீர் மறைவு திரையுலகினர், அவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியின் உடல் இன்று காலை இந்தியா கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

திருமண விழா

ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.  அவருக்கு வயது 54. துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

ஸ்ரீதேவியின் அகால மரணத்தை அவருடைய மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், மகள் குஷி இருவரும் உயிர்பிரியும் போது உடனிருந்திருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி திருமண விழாவுக்கு செல்லாததால் மும்பை இல்லத்தில் இருந்திருக்கிறார்.
 

ரசிகர்கள் அதிர்ச்சி...

54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1969-ம் ஆண்டில் வெளியான துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர்.

16 வயதினிலே...

தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தவர். இயக்குனர் பாலச்சந்தரின் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 16 வயதினிலே மயில் கேரக்டர் ஸ்ரீதேவியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய திரைப்படமாக அமைந்தது.

விருதுகள்...

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி.  மீண்டும் கோகிலா என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது. சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றிருந்தார். ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.  ஆந்திராவின் சிறந்த

நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு கிடைத்தது.

இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.  2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும் கவுரவித்தது. மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (2013), பிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான மாமி உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து