முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டன்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2018-ம் ஆண்டு சீசனில் கேப்டனாக தமிழரும், சென்னையைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது, 2-வது தமிழர் கொல்கத்தா அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்தமாதம் தொடங்க உள்ளது. கடந்த மாதம் பெங்களூருவில் நடந்து முடிந்த ஏலத்தில் பல்வேறு அணிகளின் வீரர்கள் மாறினர் என்பதால், கேப்டன்களை நியமிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து வந்த கவுதம் கம்பீரை இந்த முறை ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்துக்கொண்டது இதனால், அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது, இது தொடர்பாக அவரும் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அனுபவ வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்து நேற்று கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை நிர்வாகி வெங்கி மைசூர் கூறுகையில், ‘நீண்ட காலத்தில் ஒரு மாற்றம் அணிக்கு வேண்டும் என்பதால், தினேஷ் கார்த்திக்கை 2018-ம் ஆண்டு சீசனுக்கு கேப்டனாக நியமித்துள்ளோம், அதேசமயம், கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பவும், அதை சிறப்பாகச் செய்யவும் இவர் தகுதியான வீரர்.

மேலும், கேப்டன்களாக கிறிஸ் லின், ராபின் உத்தப்பா பெயரும் பரிசீலிக்கப்பட்டதில் தினேஷ் கார்த்திக் தகுதியான நபராக இருந்தார். இதனால், ராபின் உத்தப்பாவை துணை கேப்டனாக நியமித்துவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் கூறுகையில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது. மிகச்சிறந்த அணிக்கு தலைமை ஏற்கிறேன். புதிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறேன். அனுபவம் நிறைந்த வீரர்களும், இளம் வீரர்களும் கலந்த அணியுடன் விளையாடுவதில் உற்சாகமாக இருக்கிறேன். தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸின் பயிற்சியும் எங்களை சிறப்பாக விளையாட துணை புரியும்’ எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார்.

இது வரை 10 ஐபில் சீசனில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 152 போட்டிகளில் 2ஆயிரத்து903 ரன்கள் சேர்த்துள்ளார். 14 அரைசதம் அடித்துள்ளார். 88 கேட்சுகள், 26 ஸ்டெம்பிங் செய்துள்ளார். இதற்கு முன் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு 2009-10 ஆம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். துலீப் டிராபி போட்டியில் கடந்த ஆண்டு இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அந்தப் போட்டியில் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

கொல்கத்தா அணியில் இந்த முறை வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று மிரட்டல் நாகர்கோட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி விவரம்:

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ராபின் உத்தப்பா(துணைக் கேப்டன்), சுனில் நரேன், ஆன்ட்ரூ ரூஷெல், கிறிஸ் லின், மிட்ஷெல் ஸ்டார்க், குல்தீப் சிங் யாதவ், பியூஷ் சாவ்லா, நிதிஷ் ரானா, கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மவி, மிட்ஷெல் ஜான்சன், சுப்மான் கில், ரங்கநாத் வினய் குமார், ரிங்கு சிங், கேமரூன் டெல்போர்ட், ஜேவன் சீர்லெஸ், அபூர்வ் விஜய் வான்கடே, இசாங் ஜக்கி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து