முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் 3,212 உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலகு சார்பில், மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்),  ஆகியோர் முன்னிலையில்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,  சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன்  ஆகியோர் தொடங்கி வைத்து, 134 உழைக்கும் பெண்களுக்கு ரூ.33.50 இலட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனத்தினை வழங்கினார்கள்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்ததாவது

‘பெண்கள் நினைத்தால், தங்கள் தலையெழுத்தை மட்டுமல்ல மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்கு தேவை, வாய்ப்புகள்! அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எனது இலட்சியம்” என்ற  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அமுதமொழிக்கு ஏற்ப  தமிழ்நாடு முதலமைச்சர்  பெண்களுக்கான வாய்ப்புகளை அளித்து வருகிறார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர்  16.02.2017 அன்று பதவியேற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான ‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கு” கையெழுத்திட்டு,  புரட்சித் தலைவி அம்மா  பிறந்த நன்நாளான 24.02.2018 அன்று  பாரத பிரதமர்  மற்றும்  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆகியோரால் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, 50 சதவீத மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முற்றிலும் மகளிருக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளை சார்ந்த உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர  வாகனம் வாங்க (யுரவழ பநயச / புநயசடநளள 125உஉ க்கு மிகாமல்) மானியத்தொகை, ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்திற்கு 2017-18ம் நிதியாண்டில் “அம்மா இருசக்கர வாகனம்” வழங்கும் திட்டமானது, 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1,550 வாகனங்களும், ஈரோடு மாநகராட்சியில் 746 வாகனங்களும்,  4 நகராட்சிகளில் 213 வாகனங்களும், 42 பேரூராட்சிகளில் 703 வாகனங்களும் என மொத்தம் 3,212 வாகனங்கள் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 134 பயனாளிகளுக்கு ரூ.33.50 இலட்சம் மானிய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம்” வழங்கப்படுகிறது.  புரட்சித்தலைவி அம்மா  ஏழைகள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய அடித்தள மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளார்கள். ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர்,  விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடிதள மக்களுக்கு கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில் அளவற்ற அக்கறை கொண்டு, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர்  புரட்சித்தலைவி அம்மா .

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக பத்தாவது படித்த பெண்களுக்கு ரூ.25,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டையம்  படித்த பெண்களுக்கு ரூ.50,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியுள்ளார்கள். மாணவ மாணவியருக்கு 14 வகையான கல்வி உபபொருட்கள், கட்டணமில்லா பேருந்து வசதி என  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பல்வேறு கல்வித் திட்டங்களால் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது.  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழைகளுக்காக வாரி வழங்கியவர்  புரட்சித் தலைவி அம்மா .
இத்திட்டத்தினால் உழைக்கும் மகளிர் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களது அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் செய்யவும் இயலும்.
எனவே உழைக்கும் பெண்கள்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இச்சிறப்பு திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தினைத்தினையும், பொருளாதாரத்தினையும் உயர்த்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது.

புரட்சித்தலைவி அம்மா  பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள்.  வழியில் செயல்படும்  தமிழ்நாடு முதலமைச்சர்   அம்மா அவர்களின் பிறந்த நாளில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்தார்கள். ஈரோடு மாவட்டம் மகளிர் திட்டம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  கண்டறியப்பட்ட ஏழை எளிய மகளிரின் நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்தை மேம்பாடுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கி, குடும்ப வருமானத்தை பெருக்கி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 

புரட்சித்தலைவி அம்மா  அரசு பெண் ஊழியாகளுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு, ஏழை, எளிய பெண்கள் கர்ப்பகாலத்தில் யாரையும் சாராமல் இருக்க பேறுகாலத்தில் வழங்கி வந்த ரூ.12,000 நிதியுதவியினை ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கியதோடு, குழந்தை பிறந்தவுடன் 16 வகை பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தினை வழங்கியுள்ளார்கள். பச்சிளங்குழந்தையுடன் பெண்கள் வெளியூர் செல்ல நேரிட்டால்  சிரமப்படக்கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, பெண்களுக்கென காவல் நிலையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
 ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12,076 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,70,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்பு ரூ.215 கோடி.        2017-18-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனாக இதுவரை ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு ரூ.2.25 கோடி ஊக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் துவங்கப்பட்டு இதுவரை ரூ.18 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 3,298 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தனி நபர் கடனாக ரூ.3.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 1105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ1.68 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 671 புதிய மகளிர் சுய அமைக்கப்பட்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி நடத்திட ரூ.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 403 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது மகளிராகிய நீங்கள் அரசு வழங்குகின்ற பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுவதோடு, தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதோடு, எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்  அலுவலர் ச.கவிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், மகளிர் திட்ட இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் ஆர்.சீனிவாசன், உதவி திட்ட அலுவலர்கள் இரா.சாந்தா, சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து