முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டனை பெற்று சிறையில் உள்ள கலீதா ஜியாவுக்கு எதிராக புதிய பிடிவாரண்ட்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா : ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கினாலும், மற்றொரு வழக்கில் அவருக்கு எதிரான புதிய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக, ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது பதவிக் காலத்தின்போது, வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான தொகையை நன்கொடையாகப் பெற்று முறைகேடு செய்ததாக, கலீதா ஜியாவுக்கு (72) அந்த நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்த நிலையில், அவருக்கு 4 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி டாக்கா உயர் நீதிமன்றம் திங்ககள்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக கலீதா ஜியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். இனயதுர் ரஹீம் மற்றும் ஷாஹிதுல் கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கலீதாவின் வயது உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஜியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 2.10 கோடி டாக்கா (சுமார் ரூ.1.65 கோடி) அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில், ஜாமீன் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில், மற்றொரு குற்றவியல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு எதிரான புதிய கைது உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

'ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.10 கோடி டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் கலீதா ஜியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து