முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளம் விமான விபத்தில் 50 பேர் பலி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நேபாளம் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்ச சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று முன்தினம்  தரையிறங்கிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாம்பர்டையர் க்யூ 400 ரக பயணிகள் விமானம் ஒன்று வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து காத்மாண்டு நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பயணிகளும், ஊழியர்கள் 4 பேரும் இருந்தனர். அவர்களில் 33 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. அவர்களுடன் சீனா மற்றும் மாலத் தீவுகளைச் சேர்ந்த 2 பயணிகளும் விமானத்தில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானமானது பிற்பகல் 2.20 மணிக்கு காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. திரிபுவன் விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் அதனைத் தரையிறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள ஓடுபாதையில் அந்த விமானம் இறங்கியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக அந்த விமானம் சென்றதால் அதன் முன்பகுதி முழுவதும் தரையில் மோதி சேதமடைந்தது. அதன் தொடர்ச்சியாக விமானத்தில் தீப்பிடித்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்த விமான நிலைய ஊழியர்களும், விபத்து மேலாண்மைக் குழுவினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர், விமானத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

முதல்கட்டமாக 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விமானத்துக்குள் இருந்து 31 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் விமானத்துக்குள் சிக்கியிருப்பதாகவும், அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாளப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேபாளம் விமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வங்காளதேசத்தின் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல் ஹாசன் மஹ்மூத் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது, விமான விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்தார். மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டி கொள்வதாகவும், காத்மாண்டு நகரில் மீட்பு பணிகளில் தேவைப்படும் உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து