பலத்த மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      தமிழகம்
Courtallam waterfalls 2018 3 14

நெல்லை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு தெற்கே மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகள் மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி


கடந்த சில வாரங்களாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 190 மில்லிமீட்டரும், ராமநதி அணையில் 130 மில்லிமீட்டரும், கடனாநதி அணையில் 110 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணையில் 102 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால் பிரதான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 19.68 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்ந்து 49.54 அடியாக உயர்ந்துள்ளது. அதே போல் நேற்று முன்தினம் 28 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து நேற்று 32 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 2,642 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

நீர்மட்டம் உயர்வு

இதே போல் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 40.02 அடியாக இருந்த கடனாநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து நேற்று 55 அடியாகவும், 25 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 35 அடியாகவும், 25.06 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 13 அடி உயர்ந்து 38.06 அடியாகவும், 20.63 அடியாக இருந்த குண்டாறு அணை நீர்மட்டம் 22.50 அடியாகவும், 10.75 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 23.25 அடியாகவும் உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

பாபநாசம்  - 90
ராமநதி  - 130
கடனாநதி  - 110
சேர்வலாறு  - 102
செங்கோட்டை  - 101
குண்டாறு  - 98
தென்காசி  - 89.3
மணிமுத்தாறு  - 67.6
அம்பை  - 66.9
ஆய்குடி  - 64
நாங்குநேரி  - 60
கருப்பாநதி  - 55
கொடுமுடியாறு  - 50
அடவிநயினார்  - 50
சேரன்மாதேவி  - 46
பாளை  - 45.2
நம்பியாறு  - 38
நெல்லை  - 31.3
சங்கரன்கோவில் - 25
ராதாபுரம்  - 13
சிவகிரி  - 9.2

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து