எதிரிக்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையே பார்லி.யில் பட்ஜெட் மசோதா நிறைவேறியது

புதன்கிழமை, 14 மார்ச் 2018      இந்தியா
indian parliament(N)

புதுடெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே 2018ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

கடும் பாதிப்பு...

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் மக்களவை 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.


எம்.பி.க்கள் அமளி...

12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு நடுவே, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் நிதி மசோதாவை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையை நடத்த விடாமல் தொடர்ந்து உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதால், எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதில் மசோதா நிறைவேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து