முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்: தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் - புதிய அறிவிப்புகள் வெளியாகலாம்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

ஆய்வுக்குழு கூட்டம்

இன்று காலை கூடவுள்ள தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும், அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபாநாயகர் தனபால் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் மீது சட்டசபையில் எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க உள்ளனர்.

கூடுதல் நிதிச் சுமை

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, தமிழகத்தின் வரி வருவாய்களில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களுக்குச் செல்கின்றன. இந்த நிலையில், ஏழாவது ஊதியக் குழு நடைமுறையால், அரசுக்கு மேலும் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்தால் தமிழகத்துக்கு வரவேண்டிய வரி வருவாய்களும் குறைந்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. இதனால், நிதிநிலை அறிக்கையில் அதிகளவு வருவாய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட புதிய வரிகள் அல்லது வரிகள் உயர்வு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. பின் இதனை தொடர்ந்து, நான்கு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவுகள் குறித்து அதில் பங்கேற்ற தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முதல்வரை சந்தித்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து