முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் : கலெக்டர் கு.ராசாமணி. தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி, செவனா ஹோட்டல், சுமங்கலி அரங்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, நேற்று(14.03.2018) தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு முகாம்

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:திருச்சி மாவட்டம், தமிழகத்தின் மையப்பகுதியாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திகழ்கிறது. சிறுகுறு தொழில் செய்பவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் அனுமதியோடு செய்துதரப்படும். ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில் தொடங்குவதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முன் உதாரணமாக திகழ்கிறது.

தமிழக அரசு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களையும் தொடங்கலாம். விவசாயம் சாராத உற்பத்தி சார்ந்த தொழில்களும் தொடங்கலாம். சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் முறையான அனுமதி பெற்று தொழில் தொடங்கலாம். வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மணப்பாறையில் 1077 ஏக்கர் அளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மிகவிரைவில் தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருவாய்த்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு திருச்சிராப்பள்ளியில் 10 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சிராப்பள்ளியில் ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. வரக்கூடிய காலங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொழில் மண்டலமாக மாறும். தமிழக அரசு புதியதாக அமைந்திடும் தொழிலகங்களை ஊக்குவித்திடவும், அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெருக்கிடவும் மான்யத்துடன் கூடிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை பொருத்தவரை வையம்பட்டி, மணப்பாறை, துவரங்குறிச்சி, புள்ளம்பாடி, இலால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, தாப்பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம் போன்ற ஊராட்சி ஒன்றியங்கள் தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டு, இவ்வாட்டாரங்களில் புதிதாக அமைக்கப்படும் தொழிலகங்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 30 இலட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிலகங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வகையான ஊக்க உதவிகள் மானியங்களை வழங்கி உள்ளன. இவற்றில் முதன்மையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 26 நிறுவனங்களுக்கு ரூபாய் 145.27 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. தவிர மூலதன மானியமாக 42 நிறுவனங்களுக்கு ரூபாய் 290 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார மானியமாக ரூபாய் 14 இலட்சமும், ஜெனரேட்டர் மானியமாக ரூபாய் 5.35 இலட்சமும், வாட்வரி மானியமாக ரூபாய் 7.2 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவைகள் தவிர சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் சுமார் 379 நபர்களுக்கு ரூபாய் 289.03 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புதியதாக தொழிலகங்களை அமைத்திட விரும்பும் தொழில் முனைவோர்கள் இத்தகைய திட்டங்களின் கீழ் பயன்பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு மட்டுல்லாமல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து தமிழக அரசின் மானியம் மற்றும் இந்தியன் வங்கி கடன் நிதியுதவியுடன், தலா ரூபாய் 2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 11 நபர்களுக்கு, புதிய ஆட்டோக்களை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் மற்றும் மண்டல மேலாளர் கே.ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சு.கந்தசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.வைத்தியநாதன், சிறுகுறு தொழில் சங்கத்தின் தலைவர் என்.கனகசபாபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியை ந.மணிமேகலை, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து