முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகி புயலில் சிக்கி காணாமல் போன 177 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி - ரூ.35.40 கோடி நிவாரணத்தை முதல்வர் எடப்பாடி வழங்கினார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒகி புயலின் போது கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 35 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியுதவியாக வழங்கினார்.

3,506 மீனவர்கள் மீட்பு

கடந்த.2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை "ஒகி" புயல் தாக்கியதால், மீன்பிடி படகுகள், உபகரணங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளானதோடு மட்டுமன்றி, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் காணாமல் போயினர். மீன்பிடிக்கச் சென்று கரை திரும்ப முடியாமல் போன மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய முயற்சியின் பயனாக 3,506 மீனவர்கள் மற்றும் அவர்களது 24 நாட்டுப் படகுகள், 264 மீன்பிடி விசைப்படகுகள் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்

தமிழ்நாடு அரசால் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒகி புயலினால் 27 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும், கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 177 மீனவர்கள் காணாமல் போயினர். "ஒகி" புயலினால் உயிரிழந்த 27 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி, தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகை தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முன்பே வழங்கப்பட்டது.

177 மீனவர்களுக்கு ரூ 35.40 கோடி

அதனைத் தொடர்ந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி வருவாய் நிருவாக ஆணையர் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 139 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 3 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 15 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 19 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 1 மீனவர், என மொத்தம் 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 35 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிவாரண நிதியுதவியாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர். சமீரன், தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணையத்தின் முன்னாள் தலைவர் சேவியர் மனோகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து