முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது திட்டம் நிறைவேற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில், சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து இலங்கை வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ தொலைவுக்கு பாலம் செல்கிறது. இந்த பாலம் இயற்கையான சுண்ணாம்பு கற்களால் உருவானதாக கூறப்படுகிறது.  ஆனால், இலங்கையில் ராவணனால் சிறைப் பிடிக்கப்பட்ட சீதையை மீட்க ராமர், வானர படை உதவியுடன் இந்த பாலத்தை அமைத்தார் என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இந்துக்கள் புனிதமாக நம்புகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையிலான சரக்கு போக்குவரத்து தொடங்குவதற்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் சேது சமுத்திரம் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தின் வழித்தடம் ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து சேது சமுத்திரம் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும். அல்லது ராமர் பாலம் சேதமடையாமல் நிறைவேற்றக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன், சுப்பிரமணியன் சுவாமி தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராமர் பாலத்தை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர். மேலும் ராமர் பாலம் விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும், கருத்தையும் தெரிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் ராமர்பாலம் தொடர்பாக அரசின் கருத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில் ராமர் பாலம் தொடர்பாக, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில்,

நாட்டின் நலன் கருதி ராமர் பாலத்துக்கு எந்தவிதமான சேதமும், பாதிப்பும் ஏற்படாமல், சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும். இதற்கான மாற்றுப் பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபடும். சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய வழிகாட்டுதலின்படி ராமர்பாலம் தொடர்பாக அரசின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு விட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராமர் பாலத்துக்கு ஆதரவாக தாக்கலான பொதுநலன் மனுக்களை நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து