முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றம் நேற்று 11-வது நாளாக முடங்கியது. இதன் காரணமாக, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நம்பிக்கை இல்லா...

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சில மணிநேரம் கூட நடைபெறாமல் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின.  ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தது.  இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அன்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களின் தலைகளை கணக்கிட முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபையை 19-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தார். இதனால் 19-ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்தது.

நேற்றும் அமளி....

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று பாராளுமன்றம் கூடியது. கூட்டத் தொடரின் 11வது நாளான நேற்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நேற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜ்நாத் சிங் ...

அ.தி.மு.க. மற்றும் தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் 12 மணிக்கு மக்களவை கூடியபோது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த விரும்புவதாகவும், அனைத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒத்திவைப்பு...

தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ்கள் தனக்கு வந்திருப்பதாகவும், கூட்டத் தொடர் அமைதியாக நடைபெற்றால் மட்டுமே நோட்டீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாக கூறினார்.  ஆனால், அ.தி.மு.க. உள்ளிட்ட  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி இருந்தனர். கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றும் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து